'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது?

தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும்.  இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாநகர், கூடல் நகர், மதுரையம்பதி, கிழக்கின் ஏதென்ஸ் என்பன மதுரையின் வேறு பல பெயர்களாகும். இந்திய துணைகண்டத்தில் ஒரு தொன்மையான வரலாறைக் கொண்ட நகரமாகும். பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாகவும் விளங்கியது. சங்க காலத்தில் தமிழ் சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையது. இந்த நகரில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக இந்த நகரம் அதிகம் அறியப்படுகிறது.

சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் தாண்டி வந்தது இம்மதுரை நகரம். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை ஆட்சி செய்த விசயன் என்ற மன்னன் தன்னுடைய பட்டத்தரசியாக மதுராபுரி (மதுரை) இளவரசியை மணந்ததாக இலங்கையின் பண்டைய வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. பராசக்தியின் வடிவமான அன்னை மீனாட்சி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் மதுரை, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய சக்திஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன. தமிழ் வளர்ச்சிக்குத் தனியே சங்கம் வைத்து வளர்த்த பெருமையும் இந்த நகரத்துக்கு உண்டு என்று பழமையான வரலாறுகள் தெரிவிக்கின்றன.

மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆலயம் மீனாட்சி , சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது. விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன் பட்டாபிசேகம், மீனாட்சியம்மன் தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
மீனாட்சி அம்மன் கோவிலை இணையத்தில் முழுவதுமாக பார்க்க இங்கே செல்லவும்.
http://view360.in/virtualtour/madurai/

மதுரை பல்வேறு அரசாட்சியின் கீழ் இருந்தாலும், பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்கள் காலம் தான் மதுரைக்குப் பொற்காலமாக இருந்திருக்கிறது. கிமு 6 முதல் கிபி 5ஆம் நூற்றாண்டு வரையில் சங்ககாலப் பாண்டியர்கள் வசமும், 5 முதல் 13ஆம் நூற்றாண்டு வரையில் இடைக்காலப் பாண்டியர்கள் வசமும் இருந்த மதுரை 14 முதல் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை டெல்லி சுல்தான்களின் வசம் இருந்தது. விஜயநகரப் பேரரசு மூலம் அந்த சுல்தான்களின் பொற்காலஆட்சி முறியடிக்கப்பட்டு 1520 ஆம் ஆண்டில் விஜயநகரர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் நாயக்கர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அவர்கள் ஆட்சியாண்டில் 1623 முதல் 1659 ஆம் ஆண்டு வரையிலான மன்னர் திருமலையின் ஆட்சி மீனாட்சியம்மன் கோயிலுக்கும் மதுரைக்கும் ஒரு பொற்காலமாக இருந்திருக்கிறது. 1736 ஆம் ஆண்டில் நாயக்கர்கள் வீழ்ச்சியுற, 1801 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரிடம் சென்றது. ஆங்கிலேயர்கள் இவ்விடத்தின் கலைப் பொருட்களை வளர்க்காவிட்டாலும், அழிக்கவில்லை.

தற்போதைய மதுரையின் மையப்பகுதி பெரும்பாலும் நாயக்கர்களால் கட்டப்பட்டதாகும். கோயில், மன்னர் அரண்மனை நடுவிலிருக்க, அதனைச் சுற்றி வீதிகளையும் குடியிருப்புகளையும் அமைக்கும், இந்து நகர அமைப்பான "சதுர மண்டல முறை" மதுரையில் பின்பற்றப்பட்டுள்ளது.
இதுபோக மதுரையைப் பற்றி இன்னும் சில புத்தகங்களிலும், அறிஞர்கள் கூறியவற்றையும் தொகுத்துள்ளோம்

மதுரை வரலாறு  பற்றி கலை இலக்கிய பெருமன்ற விழாவில் உரை நிகழ்த்திய தொல்லியல் அறிஞர் வேதாச்சலம் "கற்காலத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். பழைய கற்காலம், இடைக் கற்காலம்,புதிய கற்காலம், பழைய கற்காலக் கருவிகள் மதுரை பகுதியில் கிடைக்கவில்லை. இடை கற்காலக் கருவிகள்; மதுரையில் கிடைத்துள்ளது. மதுரை என்றால், மதுரையின் மையப்பகுதி இதுவரை அகழவாராய்ச்சி செய்யப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை. மதுரையைச் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று உள்ளது. மதுரையின் மையப்பகுதியில் எதிர்க்காலத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றதால் இன்னும் பல வரலாற்று சான்றுகளைப் பெற முடியும் என்பது உண்மை.

உலகின் மூத்த குடி தமிழ்க்குடி மதுரையில் வாழ்ந்துள்ளான். மதுரை மனிதன் பூமியில் புதைந்து கிடந்துள்ள கற்களை சிறுசிறு கருவியாகப் பயன்படுத்தி இருக்கின்றான். கி.மு 4000 ஆண்டில் பயன்படுத்தப்பட்ட கற்காலக் கருவி துவரிமான், அரிட்டாபட்டி, மாங்குளம் போன்ற பகுதிகளில் கிடைத்தது. நாடோடி வாழ்க்கையில் இருந்து மாறி, ஓரிடத்தில் தங்கி வாழும் வாழ்க்கைக்கு மாறுகிறான்.

கற்காலத்திற்குப் பின் இரும்பு காலம் வருகின்றது. கி.மு. 1000இரும்பு உருவாகின்றது. இரும்பு கண்டுபிடிப்பிற்கு பின் மனித வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றது. மதுரையின் புறப்பகுதியில் இரும்புக்கால மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் பல கிடைத்துள்ளன. ஆரம்பத்தில் மனிதன் இறந்ததும் எரிக்கும் பழக்கம் இல்லை. சமாதிகள் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. சமாதியைச் சுற்றி கல்வட்டம் அமைத்தல், பூமிக்கு மேல் கல்லறை கல்திட்டு அமைத்துள்ளனர். இடு துளை வழியாக படையல் பொருட்கள் ஆண்டுதோறும் போடும் பழக்கம் இருந்துள்ளது. பின் குத்துக்கல் வைத்து நடும் முறை, பின் எழுதி வைக்கும் கல்வெட்டு முறை, முதுமக்கள் தாழிகள் இட்டு புதைக்கும் முறை வந்தது. மேலூர் அருகே வெள்ளரிப்பட்டி பெருமாள் மலை அருகே ஆயிரக்கணக்கான கல்லறைகள் இன்றும் உள்ளது. சில அழிந்து விட்டது.

மதுரையில் கோவலன் பொட்டல் என்ற பகுதியில் கல்லறைகள் உள்ளது. இறந்தவர்களை புதைத்தல் பின்னர் அவர்களது எலும்புகளை எடுத்து கலயத்தில் வைத்துள்ளனர். மண்ணோடு புதைக்கப்பட்ட எலும்புகள் 200 வருடத்திற்குள் அழிந்து விடும். தாழிகளில் வைக்கப்பட்ட எலும்புகள் ஆயிரம் வருடங்களானாலும் அழியாமல் அப்படியே இருக்கும். அந்த ஆற்றல் உள்ள கலயத்தை அன்றே கண்டுபிடித்து உள்ளான். இன்றைக்கு மதுரையில் ஆவின் பால் நிறுவனம் உள்ள சாத்தமங்கலம் பகுதியில் கல்லறைகள் நிறைய இருந்தன. கி.மு 400 ஆண்டில் மதுரையின் நாகரிக வளர்ச்சிக்கு பத்துப்பாட்டு, எட்டுத் தொகையில் இலக்கியச் சான்றுகள் உள்ளது. கி.மு நூற்றாண்டிலேயே மதுரை என்ற பெயர் இருந்துள்ளது. அழகர் மலையில் கி.மு.2ஆம் நூற்றாண்டில் மதிரை என்ற சொல் வருகின்றது. மதிரை என்பது ஒரு பெண் தெய்வத்தின் பெயராக இருந்திருக்கலாம். ஆதிரை என்பது போல மதிரை என்பது மதுரையாக பிறகுதான் மாறுகின்றது. கி.மு3ஆம் நூற்றாண்டில் பாண்டி நெடுஞ்செழியன் முனிவர்களுக்கு கல் படுகை அமைத்துக் கொடுத்ததற்கான சான்று உள்ளது. மதுரையில் பௌத்தம், சமணம் என பல்வேறு சமயங்களும் இருந்துள்ளது. மதுரையைச் சுற்றி 13 இடங்களில் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

புலிமான் கொம்பு என்ற இடத்தில் நடுகற்கள் கிடைத்தது. இந்தியாவிலேயே தொன்மையான சான்றாக அசோகர் காலச் சான்று சொல்லப்படுகின்றது. அதற்கும் முந்திய சான்றுகள் மதுரையில் உள்ளது. பூலாங்குறிச்சி என்ற ஊரில் மதுரையைப் பற்றிய சாசனம் கிடைத்தது. சேந்தன், சேந்தன்குட்டன் என்ற மன்னர்கள் வரலாற்றில் மதுரையைப் பற்றி வருகின்றது. சங்க காலத்திற்கு பிறகான கல்வெட்டு நிறைய கிடைத்துள்ளது. சமண மதத்தில் வாசுதேவன் என்ற கடவுள் இருந்தது. குளக்கரையில் முனிவர்கள் வசித்த இடம் இப்படி பல்வேறு சான்றுகள் பல்வேறு சமணர்களின் கல் படுக்கைகள் உள்ளது. மதுரை மீண்டும் பாண்டியர்கள் வசம் வருகின்றது. கடுங்கோன் என்ற மன்னன் கைப்பற்றுகின்றான். இதற்கான செப்பேடு உள்ளது. குருவிக்காரன்சாலை பகுதியில் வைகை ஆற்றில் துணி துவைக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு கல்லை எடுத்துப் பார்த்த போது வட்டெழுத்து கல்வெட்டாக இருந்தது. கிபி.7-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு தடுப்பணை,மதகு அமைத்து வாய்க்கால் வெட்டி நீர் பாசனம் நடந்ததை தெரிவிக்கின்றது.அடுத்தவர்களை பாதிக்கும் வண்ணம் பெரிய அணைகள் அன்று கட்டப்படவில்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவரது தளத்தில் “திரும்பிப்பார்” என்ற கட்டுரையில் "பழைய மதுரையின் வீதிகளில் குதிரை வண்டிகள் கடந்து போவது, சுழித்தோடும் வைகை ஆற்றில் மீன்பிடிப்பது. வெற்றிலை வியாபாரம் செய்யும் பெண்கள், துறவிகள், எளிய மனிதர்கள். சிறுவர்கள், பாம்படம் அணிந்த பெண்கள்.  கோவிலின் அழகு ஒளிரும் புறத்தோற்றம் என மதுரையின் கடந்தகாலத்தைப் பார்க்க பார்க்க நெகிழ்ச்சி தருவதாகவே இருக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

சமச்சீர்கல்விப் பாடப்புத்தகத்தில் உள்ள ‘தூங்கா நகர்’ எனும் பாடத்தில் "  நள்ளிரவு மணி பன்னிரண்டு. எங்கும் சாலைகள் சந்தடியற்றுக் கிடக்கும்; தெருக்களில் மக்கள் நடமாட்டமே இருக்காது; எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பர். இஃது உலக இயற்கை.

ஆனால், இவ்வாறு உலகமே உறங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும் விழித்திருக்கும் ‘தூங்காநகர்’ ஒன்று தமிழகத்திலுள்ளது. அந்நகர் எதுவென உங்களுக்குத் தெரியுமா? ஆண்டின் எல்லா நாளிலும் விழாக்கள் கொண்டாடியபடி இருப்பதால், திருவிழாநகர் என்னும் பெருமை பெற்ற நகரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாற்றிசையிலும் கலையழகு பொருந்திய மாபெருங் கோபுரங்களோடு எட்டுச்சிறிய கோபுரங்களையும் கொண்டு எழில்மிகு சிற்பக்கலைக் கூடமாக விளங்கும் கோயில் மாநகர் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா? பழம்பெரும் தமிழர்தம் நாகரிகத்தொட்டிலாத் திகழ்ந்த தென்னிந்தியாவின் ஏதென்ஸ் எனப் புகழ்பெற்ற நகருக்கு நீங்கள் சென்றது உண்டா? சங்கம் வைத்துச் செந்தமிழ் வளர்த்த நகரம், முன்பு பாண்டியர்தம் தலைநகராக விளங்கிய நகரம், இன்றைய தமிழகத்தின் இரண்டாவது பெருநகரமாகத் திகழும் நகரம் எதுவெனத்தெரியுமா? இத்துணைச் சிறப்புக்கும் உரிய நகரம் மதுரை என்னும் மாநகரம்.

மதுரை – பெயர்க்காரணம்

பாண்டிய நாட்டின் பழைமையான தலைநகரமாக விளங்கிய மதுரை, இன்றைய தமிழகத்தின் முதன்மை நகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. மதுரை என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை. தமிழ் என்றால் மதுரை; மதுரை என்றால் தமிழ். இங்ஙனம், இவை இரண்டும் பிரிக்க இயலாதவை. அதனாலேயே மதுரையைப் போற்றப் புகுந்த புலவர் எல்லாரும் தமிழோடு சேர்த்தே போற்றிப் புகழ்ந்தனர். தமிழ்கெழு கூடல் எனப் புறநானூறு போற்றியது. நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர், தாம் பாடிய சிறுபாணாற்றுப்படையில்,’தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை’ என்று குறித்தார். இளங்கோவடிகள், தமது நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில், ‘ஓங்குசீர் மதுரை’, ‘மதுரை மூதூர் மாநகர்’, ‘தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை’, ‘மாண்புடை மரபின் மதுரை’, ‘வானவர் உறையும் மதுரை’, ‘பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்’ எனப் பற்பல அடைமொழிகளால் மதுரைக்கு புகழ்மாலை சூட்டி மகிழ்ந்தார். ‘சேரநாடு வேழமுடைத்து, சோழநாடு சோறுடைத்து, பாண்டியநாடு முத்துடைத்து, தொண்டைநாடு சான்றோர் உடைத்து’ என்பன தமிழகத்தின் சிறப்பை உணர்த்தும்.

மதுரைக்கு கூடல் எனவும், ஆலவாய் எனவும் வேறு பெயர்கள் வழங்குகின்றன. நான்மாடக்கூடல் என்னும் பெயரே கூடல் என மருவியுள்ளது. திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால், நான்மாடக்கூடல் என்னும் பெயர் வழங்கலாயிற்று என்பர். ‘கன்னிகோவில்’, ‘கரியமால் கோவில்’, ‘காளிகோவில்’, ‘ஆலவாய்க் கோவில்’ ஆகிய நான்கு திருக்கோவில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்ததால், நான்மாடக்கூடல் என்னும் பெயரமைந்தது என்பாரும் உளர்.

வருணன், மதுரையை அழிக்க ஏழு மேகங்களை அனுப்பினான். அதைப்பற்றி இறைவனிடம் பாண்டியன் முறையிட, இறைவன் நான்கு மேகங்களை மதுரையைக் காக்க அனுப்பினார். அந்நான்கும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்தமையால் நான்மாடக்கூடல் என்னும் பெயர் ஏற்பட்டதாகப் பரஞ்சோதியார் கூறியுள்ளார். எந்நாட்டவரும் எவ்வூரினரும் வந்துகூடும் வளமான நகர் என்பதால், கூடல் என்னும் பெயர் பெற்றது என்பர். சங்கம் வைத்துச் செந்தமிழை வளர்க்க, புலவர் எல்லாரும் கூடியதால், கூடல் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் அறிஞர் கூறுவர்.

மதுரையை விரிவுபடுத்த எண்ணி, இறைவனிடம் அதன் எல்லையை வரையறுத்துத் தருமாறு வேண்டினான் பாண்டியன். இறைவன், தன் கையணியாகிய பாம்பிடம் எல்லையை வரையறுக்க ஆனையிட்டார். பாம்பு வாலை நீட்டி வலமாகத் தன் உடலை வளைத்தது. அவ்வாலைத் தனது வாயில் சேர்த்து மதுரையின் எல்லையை வகுத்துக் காட்டியது. அன்றுமுதல், மதுரைக்கு ஆலவாய் என்னும் பெயர் அமைந்ததாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. ஆலவாய் என்பது ஆலத்தை(விடத்தை) உடைய பாம்பினைக் குறிக்கும். மதுரையில் எழுந்தருளிய ஈசன், ஆலமர நிழலில் வீற்றிருந்ததால் ஆலவாய் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.
தென்மதுரையகத்தே சிறந்து நின்ற முதற்சங்கம் கடற்கோளால் அழிந்துபட, கபாடபுரத்தின்கண் இடைச்சங்கம் அமைந்தது. பின்னர், மற்றுமொரு கடற்கோளால் அந்நகரும் விழுங்கப்பட, கடைச்சங்கம் நிறுவப்பட்ட நிலப்பகுதியே இன்றைய மதுரை என்பர்.  மருத மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்தமையால் மருதை என வழங்கிய இடம் காலப்போக்கில் மதுரை என்றாகியதாம். கல்வெட்டில் மதிரை என்ற பெயர் காணப்படுகிறது. சங்ககால மதுரை, பூம்புனல் ஆறாகிய வையை ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. அம்மதுரையில் யானைமீது போர்வீரன் ஒருவன் உட்கார்ந்து, தன் கையில் மிக உயர்ந்த வெற்றிக்கொடியை ஏந்திச் செல்லும் அளவுக்குக் குன்றைக் குடைந்தாற் போன்ற வாயிலும், பாம்பென நெளிந்து செல்லும் பொறிகளையுடைய பெருமதிலும், அதனைச்சுற்றி ஆழ்ந்து அகன்ற அகழியும் இருந்துள்ளன. யானைக் கூட்டங்கள் அகழிக்குப் போவதற்கு ஏற்ற சுருங்கை(சுரங்க) வழியும் அமைந்திருந்தது. மதுரைநகரின் நடுவில் அண்ணல் கோவிலும் அதனைச் சுற்றி முறையாக ஒழுங்குற அமைந்த தெருக்களும் காண்பதற்குத் தாமரைப் பொகுட்டையும் அடுக்கடுக்கான இதழ்களையும் போன்று காட்சியளித்தன. இஃது அன்றைய தமிழர் நகரமைப்புக் கலையின் நுணுக்கத்தை உலகிற்குப் பறைசாற்றும் அடையாளமாகத் திகழ்கின்றது.

சிவன், திருமால், பலராமன், செவ்வேள், ஐயை, கொற்றவை, சிந்தாதேவி எனக் கடவுளர் பலருக்கும் கோவில்கள் இருந்துள்ளன. அரண்மனை, பல்வேறு தெருக்கள், அறங்கூறு அவையம், அம்பலங்கள், மன்றங்கள், அறக்கூழ்சாலைகள், நாளங்காடி அல்லங்காடி முதலியன மதுரையில் இருந்துள்ளன.

சங்கப்புலவர்களுள் கணக்காயனார் மகனார் நக்கீரனார், குமரனார், நல்லந்துவனார், மருதனிளநாகனார், இளந்திருமாறன், சீத்தலைச் சாத்தனார், பெருங்கொல்லனார், கண்ணகனார், கதங்கண்ணாகனார், சேந்தம்பூதனார் முதலியோர் அன்றைய மதுரையில் வாழ்ந்தோராவர். சிவபெருமான் சுந்தரபாண்டியனாகவும் செவ்வேள் உக்கிரகுமாரப்பாண்டியனாகவும் உமையம்மை மலையத்துவசனுக்கு மகளாகத் தோன்றித் தடாதகைப் பிராட்டியாராகவும் மதுரையை ஆண்டனர். அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராக மாணிக்கவாசகர் திகழ்ந்தார். திருஞானசம்பந்தர் கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் மங்கையர்க்கரசி, குலச்சிறையார் உதவியுடன் சைவத்தைக் காத்தார். பாண்டிய நாட்டை ஆண்ட மன்னருள் பலர், சிறந்த புலவர்களாகவும் விளங்கினார்கள். அவர்களுள் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், வரகுண பாண்டியன், அதிவீரராம பாண்டியன் முதலியோர் நற்காவலர்களாகவும் சிறந்த பாவலர்களாகவும் திகழ்ந்தார்கள். இத்திருக்கோவிலில் மீனாட்சியம்மையும் சொக்கநாதரும் அழகுற வீற்றிருந்து அருளுகின்றனர். கோவிலின் உள்ளே பொற்றாமரைக் குளம் அமைந்து உள்ளது. இக்கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது."  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீரின்றி, தானம் அறக்கட்டளை  "தற்போதைய மதுரை, முற்காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த அற்புத வனமாய்த் திகழ்ந்ததாக புராணங்கள் சுட்டுகின்றன. இதனால் ‘கடம்பவனம்’ என்ற பெயராலும் மதுரை அழைக்கப்படுகிறது. மதுரை என்ற பெயர்க்காரணத்தை விளக்க புராணக்கதையொன்றும் தொன்று தொட்டு வழங்கப்படுகிறது. சிவபக்தனான தனஞ்சயன் என்னும் வணிகன், ஒருநாள் தொழில் நிமித்தம் காட்டிற்குள் பயணம் செய்தபோது, தேவர்கள் எல்லாம் கூடி, ஒரு கடம்ப மரத்தடியில் சுயம்புலிங்கம் ஒன்றை வணங்கிக் கொண்டிருந்ததைக் கண்டான். இந்தச் செய்தியை மன்னன் குலசேகர பாண்டியனிடம் தனஞ்சயன் சொல்ல, மன்னனும் உடனே அவ்விடத்தில் கோவில் ஒன்றை எழுப்பினான். அதற்குப் பிறகு கோவிலை மையமாக வைத்து மதுரை மாநகரை வடிவமைத்தான். இந்நகருக்குப் பெயர் சூட்டும் நாளன்று சிவபெருமான் எழுந்தருளியதாகவும், அவரது சடைமுடியிலிருந்து சந்திரக் கலையின் புத்தமுது நகரின் மீது விழுந்ததாகவும், அதனால் இந்நகர் மதுரை என்று பெயரிடப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. மதுரம் என்றால் தமிழில் இனிமை என்று பொருள்.

மருத மரங்களும் நிறைந்திருந்த காரணத்தால் ‘மருதை’ என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் மதுரை என்று திரிந்ததாகவும் சில ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். அதற்குச் சான்றாக தற்போது மதுரையின் சுற்றுப்பகுதிகளில் வாழுகின்ற கிராமப்புற மக்கள் இன்றைக்கும் கூட மதுரையை ‘மருதை’ என்றழைப்பதும் குறிப்பிடத்தக்கது.

சங்க காலத்தில் தமிழ்ப்புலவர்கள் அனைவரும் கூடி இலக்கியப் பூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தியதன் காரணமாய் ‘கூடல்மாநகர்’ என்ற பெயராலும், திசைக்கொன்றாய் கோட்டையின் நான்கு வாசற்புறங்களைக்(மாடங்கள்) கொண்டு திகழ்ந்ததால் ‘நான்மாடக்கூடல்’ என்ற பெயராலும் மதுரை அழைக்கப்படுகிறது. ‘கூடல்’ என்னும் பெயர் பொதுவாக இரு நதிகள் சங்கமிக்கும் இடத்தைக் குறிப்பதாகும். பழங்கால நகரங்கள் பல இத்தகைய கூடல்களில்தான் அமைந்திருந்தன. அதுபோன்றே மதுரை மாநகரும் கூட, வைகை நதியும் அதன் உபநதியும் சங்கமித்த இடத்தில் அமையப்பெற்றிருக்க வேண்டும். காலப்போக்கில் அந்த உபநதி தன் போக்கை மாற்றியிருக்கக்கூடும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாகும்.

‘ஆலவாய்’ என்ற மற்றொரு பெயராலும் மதுரை அழைக்கப்பெற்றது. ‘ஆலம்’ என்ற சொல்லுக்கு நீர்நிலை என்று பொருள். பழம் மதுரையைச் சுற்றி அகழியும், கோட்டையின் வடபுறத்தில் அகழியை ஒட்டி வைகையும் எப்போதும் நீர்நிறைந்து ஓடியதால் ‘நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்த ஊர்’ என்ற பொருள்பட இப்பெயர் வழங்கப்பெற்றது என்று அறிஞர் மயிலை.சீனி.வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார்.




தென்மதுரையகத்தே சிறந்து நின்ற முதற்சங்கம் கடற்கோளால் அழிந்துபட, கபாடபுரத்தின்கண் இடைச்சங்கம் அமைந்தது. பின்னர், மற்றுமொரு கடற்கோளால் அந்நகரும் விழுங்கப்பட, கடைச்சங்கம் நிறுவப்பட்ட நிலப்பகுதியே இன்றைய மதுரை என்பர்.

மருத மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்தமையால் மருதை என வழங்கிய இடம் காலப்போக்கில் மதுரை என்றாகியதாம். கல்வெட்டில் மதிரை என்ற பெயர் காணப்படுகிறது. சங்ககால மதுரை, பூம்புனல் ஆறாகிய வையை ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. அம்மதுரையில் யானைமீது போர்வீரன் ஒருவன் உட்கார்ந்து, தன் கையில் மிக உயர்ந்த வெற்றிக்கொடியை ஏந்திச் செல்லும் அளவுக்குக் குன்றைக் குடைந்தாற் போன்ற வாயிலும், பாம்பென நெளிந்து செல்லும் பொறிகளையுடைய பெருமதிலும், அதனைச்சுற்றி ஆழ்ந்து அகன்ற அகழியும் இருந்துள்ளன. யானைக் கூட்டங்கள் அகழிக்குப் போவதற்கு ஏற்ற சுருங்கை(சுரங்க) வழியும் அமைந்திருந்தது.        மதுரைநகரின் நடுவில் அண்ணல் கோவிலும் அதனைச் சுற்றி முறையாக ஒழுங்குற அமைந்த தெருக்களும் காண்பதற்குத் தாமரைப் பொகுட்டையும் அடுக்கடுக்கான இதழ்களையும் போன்று காட்சியளித்தன. இஃது அன்றைய தமிழர் நகரமைப்புக் கலையின் நுணுக்கத்தை உலகிற்குப் பறைசாற்றும் அடையாளமாகத் திகழ்கின்றது.

சிவன், திருமால், பலராமன், செவ்வேள், ஐயை, கொற்றவை, சிந்தாதேவி எனக் கடவுளர் பலருக்கும் கோவில்கள் இருந்துள்ளன. அரண்மனை, பல்வேறு தெருக்கள், அறங்கூறு அவையம், அம்பலங்கள், மன்றங்கள், அறக்கூழ்சாலைகள், நாளங்காடி அல்லங்காடி முதலியன மதுரையில் இருந்துள்ளன. சங்கப்புலவர்களுள் கணக்காயனார் மகனார் நக்கீரனார், குமரனார், நல்லந்துவனார், மருதனிளநாகனார், இளந்திருமாறன், சீத்தலைச் சாத்தனார், பெருங்கொல்லனார், கண்ணகனார், கதங்கண்ணாகனார், சேந்தம்பூதனார் முதலியோர் அன்றைய மதுரையில் வாழ்ந்தோராவர்.
 
சிவபெருமான் சுந்தரபாண்டியனாகவும் செவ்வேள் உக்கிரகுமாரப்பாண்டியனாகவும் உமையம்மை மலையத்துவசனுக்கு மகளாகத் தோன்றித் தடாதகைப் பிராட்டியாராகவும் மதுரையை ஆண்டனர். அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராக மாணிக்கவாசகர் திகழ்ந்தார். திருஞானசம்பந்தர் கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் மங்கையர்க்கரசி, குலச்சிறையார் உதவியுடன் சைவத்தைக் காத்தார். பாண்டிய நாட்டை ஆண்ட மன்னருள் பலர், சிறந்த புலவர்களாகவும் விளங்கினார்கள். அவர்களுள் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், வரகுண பாண்டியன், அதிவீரராம பாண்டியன் முதலியோர் நற்காவலர்களாகவும் சிறந்த பாவலர்களாகவும் திகழ்ந்தார்கள். இத்திருக்கோவிலில் மீனாட்சியம்மையும் சொக்கநாதரும் அழகுற வீற்றிருந்து அருளுகின்றனர். கோவிலின் உள்ளே பொற்றாமரைக் குளம் அமைந்து உள்ளது. இக்கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது."  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநகர் மதுரை எப்போதும் மணக்கோலம் பூண்டது போன்ற தோற்றத்துடன் திகழ்வதாக இளங்கோவடிகள் ‘மணமதுரை’ (சிலம்பு 24;5) என்ற சொல்லாடல் மூலமாக விளக்குகிறார். ‘விழாமலி மூதூர்’ எனும் சிறப்புப் பெற்ற மதுரை, ஆண்டின் அனைத்து மாதங்களிலும் விழாக்கோலம் பூண்டு திகழ்கிறது. அது மட்டுமின்றி, தமிழ் மாதங்களின் பெயர்களாலேயே தெருப்பெயர்கள் அமைந்துள்ளதும் மதுரையின் மற்றுமொரு சிறப்பாகும். மதுரைவாழ் மக்கள், குளங்கள், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளை அடிப்படையாகக்கொண்டு, அப்பெயர்களாலேயே தங்களின் சிற்றூர்களை அழைத்து மகிழ்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மதுரை நகரின் கட்டிடக் கலையும் நகரமைப்பும் கிரேக்க நாட்டின் தலைநகரைப் போன்று இருந்ததால் ‘கிழக்கு நாடுகளின் ஏதென்ஸ்’ என்று மதுரையைப் பற்றி கிரேக்க யாத்திரிகர் மெகஸ்தனிஸ் கி.மு.3ஆம் நூற்றாண்டு தனது இண்டிகா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். மெகஸ்தனிஸின் வருகைக்குப் பிறகு, ஏராளமான ரோமானியர்களும், கிரேக்கர்களும் மதுரைக்கு வந்து பாண்டிய அரசர்களுடன் வணிகத்தொடர்பு வைத்திருந்தனர். உலகப் பேரழகி கிளியோபாட்ராவுக்கு பாண்டி நாட்டிலிருந்து முத்து, மயில் தோகை, அகில், சந்தனம் போன்ற பொருட்கள் ஏற்றுமதியானதாக கிரேக்க நாட்டுப் பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன.

8 comments:

தங்களது வரலாற்று பதிவு மிகவும் சிறப்பு
பயனுல்லதாக இருந்தது

மொகலாயர் காலத்தில் மதுரையின் பெயர் என்ன?

மல்லிகை மாநகர் என அழைக்கப்பட்ட பெயர்க்காரணம் கூறலாமே

மல்லிகை மாநகர் என்பதற்கான பெயர்க்காரணம் கூறுங்கள் pls.

மிக அருமை.. பல அறிய தகவல்கள் தெரிவிக்கின்றன... 🤝🏻

மதுரை பற்றிய அரிய தகவல்கள் சிறப்பு.

தூங்கா நகர், மல்லிகை நகர் என்பதெல்லாம், மதுரையின் பழைமைக்கு சம்மந்தமற்றது என கருதுகிறேன். மதுரை யின் வரலாற்று சிறப்பு பிரமிப்பானதாக உள்ளது. தமிழ்ச்சங்கம், தொன்றுதொட்டு மொழிக்கென்றே ஆண்டவன் முதற்கொண்டு, சங்கத்தில் அங்கம் வகித்த சிறப்பு உண்டு. இன்று கலாச்சார படையெடுப்பு நடந்து கொண்டே இருக்கிறது. அரசு மட்டுமின்றி, மதுரை மண்ணின் மைந்தர்கள், மொழி வழக்கிலும், அதனை போற்றி புகழ்ந்து மொழியை காப்பது நம் கடமை என உறுதியோடு செயலாற்ற வேண்டும்.
பாராட்டுக்குரிய பதிவு!
அப்போதைக்கப்போது அகழாய்வு தரவுகளை பதிவுசெய்து, புதுப்பித்தல் நல்லது.

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content